
அய்யா துணை
ஸ்ரீ மஹாவிஷ்ணு
வைகுண்ட அவதாரத்தில்
அருளிய உபதேசங்கள்
சான்றோர்களே, உலகைப் படைத்துக் காக்கும் ஸ்ரீமன் நாராயணர் இக்கலி யுகத்தில் மக்களை இரட்சித்துக் காப்பாற்ற, கொல்லம் வருடம் 1008ஆம் ஆண்டு, மாசி மாதம் 20-ஆம் தேதி, அதாவது கி.பி. 1833 மார்ச் மாதம் 1- ஆம் தேதி) வெள்ளிக் கிழமையன்று தாமே ஸ்ரீமன் வைகுண்டராக பூமியில் அவதரித்தார். பூலோகத்தில் அவதரித்த உலகளந்த ஆண்டவர், பூமிக்கு மேலும் கீழும் உள்ள பதினான்கு லோகங்களான சத்ய லோகம், தப லோகம், ஜன லோகம், மகர லோகம், சுவர் லோகம், புவர் லோகம், பூலோகம் (நாம் வாழும் பூமி), அதல லோகம், விதல லோகம், சுதல லோகம், தலாதல லோகம், மகாதல லோகம், ரசாதல லோகம் மற்றும் பாதாள லோகம் போன்றவற்றில் உள்ளவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அருளிய உபதேச மொழிகள் கீழுள்ளவை.
(1) இன்று முதல் எல்லோரும் ‘இகபரா தஞ்சமென்று’
ஒன்று போல் எல்லோரும் ஒருபுத்தியாய் இருங்கோ!
என்றும்‘ஏகப் பரம்பொருளே’ இனி தஞ்சம் என அனைவரும் ஒருபுத்தியாய்புத்தியோடிருங்கோ!
(2) நாட்டுக் அரிவிதிநான், நாராயணனும் நான், பட்சி பறவை பல ஜீவ ஜந்துக்களை நிச்சயமாயப் படைத்த நீல வண்ண நாதனும் நான், மண்ணேழளந்த மாயப் பெருமாளும் நான், விண்ணேழளந்த விஷ்ணு திருவுளம் நான், ஏகம் படைத்தவன் நான், எங்கும் நிறைந்தவன் நான், ஆகப் பொருள் மூன்றும் அடக்கம் ஒன்றானதினால் நாதக்கடல் துயின்ற நாகமணி நானல்லவோ; ஜீவ ஜந்துக்கெல்லாம் ஜீவனும் நானல்லவோ!
உலகைப் படைத்த நான், அதன் விதியையும் நிர்ணயிக்கிறேன் பறவை விலங்குகளை படைத்த நீலவண்ணன் நான்,ஏழு உலக மண்ணையும், விண்ணையும் அளந்த மாயவனே.எங்கும் வியாபித்துள்ள நான், அவற்றின் ஆத்மாவாகவும் உளேன்.மும்மூர்த்திகளையும் என்னுள் அடக்கி உள்ளமஹாவிஷ்ணு நானே பாற்கடலில் ஆதிசேஷன் மீது சயனிக்கிறேன்!
ரிக்வேதம் 1:164:46 என்பதில் காணப்படும் “ஏகம் சத் விப்ர: பஹுதா வதந்தி.” எனும் ஸ்லோகத்தில் கூறப்பட்டு உள்ளது என்ன என்றால் “பரம்பொருள் என்பது ஒன்றே ஒன்று தான். அந்த தெய்வத்தைத்தான் ஞானியர்கள் பல பெயர்களிலும் அழைக்கின்றனர்”.
(3) மந்திரமும் நானானேன், மருந்துமூலி நானானேன்,
சந்திரனும் நானானேன், சூரியனும் நானானேன்,
ஜோசியங்கள் சூத்திரங்கள் பலசாஸ்திரங்கள் நானானேன்,
எண்ணடங்கா சோதிபரன் மண்ணடங்கியிருக்கிறேன்!
மந்திர தந்திரமும் நானே, மருந்து மூலிகையும் நானே.சூரியனும் நானே, சந்திரனும் நானே.ஜோசிய, சூத்திர, சாஸ்திரம் அனைத்தும் நானே.எண்ணிலடங்கா அனைத்திலும் பரவி உள்ளநான்,ஜோதிஸ்வரூபமாகபூவுலகில் அவதரித்து உள்ளேன்!
(4) இந்த உலகத்தை, உலகில் உள்ள செல்வங்களை
உருவாக்கி வைப்பதும் அவற்றை அழிப்பதும் நானே!
உயிரினங்களையும்,வளங்களயம் படைத்தவனும்நானே,படைத்ததை அழிப்பவரும் நானே!
(5) எவரிருந்து மணியம் பண்ண வேணுமானாலும்
எந்தன் முக்கால் அடிக்குள்தானே!
எவரிருந்து மணியம் பண்ண வேணுமானாலும் எந்தன் முக்கால் அடிக்குள்தானே!
(6) உன்னோடு என்னாளும் உயிர்க்குயிராயி ருப்பேனப்பா!
ஊட்டுகிறேன், ஓட்டுகிறேன் நான் உயிர்க்குயிரா யிருக்கிறேன்!
உன் ஜீவனோடு கலந்துள்ளேன் மகனே. என்றென்றும் உனக்கு துணை நின்று, நல் வழி நடத்துகிறேன்!
(7) அற்பமிந்த வாழ்வு அநியாயம் விட்டுவிடு, கரணமீ தில்லாமல் கௌவையற்று வாழ்ந்திருந்து
மரணம் வந்துசீவன் மாண்டுபோ கும்போது நன்மை யதுகூட நாடுமே யல்லாது தீமை வராது!
அற்ப வாழ்வில் உள்ளவனே அநீதி செய்திடாதே. எவருக்கும் பலனின்றிவாழ்ந்து மரணம் அடைந்தால் நீ செய்த நன்மைகள்தான் உனக்கு உதவிடும் தீமைகள் உனக்கு துன்பத்தையே தரும்!
(8) என் மகனே, தரணியில் தர்மமதை வளர்க்கவும்,
வர்மமதை (அதர்மத்தை) வதைக்கவும் வந்தேன்!
என் மகனே, இவ்வுலகில் அதர்ம கலியை அழித்து தர்மத்தை நிலைநாட்ட நான் வந்துள்ளேன்!
(9) தரணியது அழிந்தாலும் சத்தியம் அழியாதப்பா!
பிரபஞ்சமே அழிந்தாலும் உண்மை அழிவதில்லை!
(10) சத்தியத்தைத் தான்மறந்து மத்திபத்தைச் செய்யாதே
மத்திபத்தைச் செய்தாயானால் மனநாகம் தீண்டிவிடும்!
சத்திய வழி வாழ்வை துறந்து அதர்ம வழி செல்லாதே. அதர்ம வழி சென்றால் உன் மனசாட்சியே உன்னை கொன்று விடும்!
(11) ஒருபுத்தியாகி உள்ளென்னைக் கொண்டோர்க்குப்
புதுப்புத்தி யீந்து பூலோகம் ஆளவைப்பேன்!
நிலையான மனதோடு, என் வழி நடப்போற்கு நல் வழி காட்டி பூலோகத்தை ஆளவைப்பேன்!
(12) அன்புக் குடிகொண்ட அதிகமக்கா நீங்களெல்லாம்,
பொறுத்து இருங்கோ பூலோகம் ஆளவைப்பேன்!
அன்பான மக்களே, பொறுமையோடிருங்கள். உங்களையும் பூலோகம் ஆளவைப்பேன்!
(13) நாரா யணக்குருவை நாளு மறவாமல்
பேராக வேயிருந்தால் பேறுங்களுக் கேகிடைக்கும்
அன்ன மளக்கும் ஆதித் திருநெடுமால்
முன்னவன் தன்பேரால் முத்திரிக ளிட்டதினால்
சென்ற இடமெல்லாம் சிறப்பதிக முங்களுக்கு!
ஆதி குரு நாராயணனாகிய என்னை என்றும் மறவாமல்,என் நினைவோடிருந்து வந்தால், பெயரும் புகழும் பெறுவீர்கள்.
அனைவருக்கும் அன்னமளிக்கும் ஆதி திருமால்,என் நாமத்தை உச்சரித்து நற்செயலை செய்து வந்தால், சென்ற இடத்திலெல்லாம் சீரும் சிறப்பும் அடைவீர்கள்!
(14) இன்று முதல் யானிருக்கும் இடங்களிலே சாதி எல்லாம்
ஒன்று போல் என்னிடத்தில் ஒத்து மிக வாரும்!
இன்று நானிருக்கும் இடத்தை நோக்கி, ஜாதி பேதமற்றுஒன்றிணைந்து அனைவரும் வாரும்!
(15) காணிக்கை இடாதுங்கோ, காவடி தூக்காதுங்கோ!
மாணிக்க வைகுண்டம் வல்லாதான் கண்டிருங்கோ!
காணிக்கை கொடுக்காதே, காவடி தூக்காதே,உங்கள் நலனுக்காகவே அவதரித்துள்ள மாணிக்கம் போல ஜொலிக்கும் வைகுண்டர் என்னை சரணடையுங்கள்!
(16) நல்லோரே ஆகவென்றால் ஞாயமதிலே நில்லும்!
நல்லவராக, வல்லவராக வேண்டுமானால்,தர்ம வழி பாதையில் நடந்திருங்கள்!
(17) அச்சுத்தேர் ஒடியும் முன்னரே ஆண்டி வேலை செய்திடுங்கோ!
உங்கள் வாழ்வு முடிந்திடும் முன்னரே, இறை சேவை செய்திடுங்கள்!
(18) ஒன்றுக்கும் மலைய வேண்டாம், யுகபர நாதன் ஆணை.
என்றைக்கும் மலையின்மீதில் ஏற்றிய தீபம் போலே,
கன்றுக்கு பாலு போலும், கண்ணுக்குப் புருவம் போலும்
என்றைக்கும் மக்கா உங்கள் இடமிருந்து அரசு ஆள்வேன்!
உலகைப் படைத்த என் மீதாணை. எதற்கும் அஞ்ச வேண்டாம். மலை மீது ஏற்றிய தீபம் போல, கன்றுக்கு பால் தரும் பசு போல, கண்ணைக் காக்கும் புருவம் போல,என்றென்றும் உங்களுக்கு துணையாயிருந்து, புவியை அரசாள்வேன்!
(19) ஞாயமுறை தப்பி நன்றி மறவாதுங்கோ,
மாய நினைவு மனதில் நினையாதுங்கோ, வைகுண்டா வென்று மனதில் நினைத்திருங்கோ!
தவறியும் நன்றி மறவாதீர், வீண் சிந்தனையையும் வேண்டாம். வைகுண்டரைரையே மனதில் நினைத்திருங்கள்!
(20) அவனவன் தேடுமுதல் அவனவன் வைத்து ஆண்டிருங்கோ!
எவனெவனுக்கும் பதறி இனி மலைய வேண்டாமே
அவரவர் சேர்த்த செல்வம்அவரவருடனேயே இருக்கட்டும்.எவரிடமும் இனி பயம் இன்றி வாழ்ந்திருங்கள்!
(21) நிலையழி யாதிருங்கோ நீதியாய் நின்றிடுங்கோ!
உயர்ந்த மக்களே, தர்ம பாதையில் சென்றிடுங்கள்!
(22) தாய்தமர்க ளென்றும், தனது கிளைகளென்றும்,
வாயுரமாய்ச் சொல்லும் வம்பரென்றும் பார்ப்பதில்லை.
அன்பாகி வந்தவரை அலைச்சல் செய்தேற்பதுண்டு,
வம்பான மாற்றானை வளர்த்தே யறுப்பதுண்டு!
தாய், தமயன் என்றோ, என் வழி உறவினன் என்றோ எதிரி என்றோ, எந்த பேதமும் பார்ப்பதில்லை வந்தவரிடம். யார் எவராயினும், சோதனை செய்தே அனைவரையும் ஏற்கிறேன். வீணாக என்னைதூற்றுபவர்களை, வளர்த்தே அழித்திடுவேன்!
(23) கோபமது உங்களுக்கு கொல்லும்வேலா யிருக்குதடா,
பொதுக்கென்ற கோபமதைப் புத்திதனிலடக்கிப்
பொறுத்து இருந்தவரே பெரியோரே யாகுமக்கா,
அறுத்திட வென்றால் அபுருவமோ என்றனக்கு,
வம்புசெய்வதைப் பார்த்து வதைக்கவந்தே னக்குலத்தை!
ஈட்டி முனை போன்ற முன் கோபமே உன்னை அழிக்கும் ஆயுதம் சட்டென வரும் கோபத்தை, பட்டென அடக்கு பொறுத்தவரே பூமியை ஆள்வார் என்பதை அறிந்து கொள்.ஒருவனை அழிக்க கண் சிமிட்டும் நேரமே போதும் எனக்கு,தீயவர்கள் கூட்டத்தை அழிக்கவே வந்தேன்!
(24) என்றைக்கும் நானிருப்பேன் என்மக்கள் தங்களிடம்
ஆளுவேன் ஒரு குடைக்குள் ஆன வைகுண்டமாய்!
மக்களே, உங்களுடன் என்றும் நானிருப்பேன். வைகுண்டர் நான் அனைவரையும் ஒரே குடைக்குள் வைத்திருந்து புவியை அரசாள்வேன்!
(25) உன்கணக்கைக் சொல்லறிவேன் ஊழ்வினையை நானறிவேன்
பண்டிதங்கள் சோதிடங்கள் படித்தாலும் அறிவாயோ!
முன் பிறப்பில் நீ செய்த கர்மவினைகளை நன்கறிவேன் நான்.ஜோதிடரும் பண்டிதரும் அறிந்திட முடியாத உண்மை அது!
(26) குலத்தைக் கெடுக்குகின்ற கோடாலிக் காம்பதுபோல்
உங்களுடைய பாவம் உயிர்வதையாய் இருக்குதடா!
மரத்திலான கோடாலி கம்பு, அதே மரத்தை அழிப்பது போல,உங்கள் பாவ மூட்டை உங்களுக்கே உயிர் வதையாய் இருக்கும்!
(27) கோபமது உங்களுக்கு கொல்லும்வேலாய் இருக்குதடா
கொலைகளவு உங்களுக்கு கொல்லும் ஆயுதமாயிருக்குதடா!
கோபமே உன்னை அழிக்கும் வேல் போன்ற ஆயுதமாகும்,கொலை, களவு செய்வதும் உன்னை அழிக்கும் ஆயுதமாகி விடும்!
(28) வாதுசூது பிறர்மோகம் வளருதப்பா ஒருகழுவாய்
ஆசையது உங்களுக்கு தோசமாக இருக்குதடா!
உன்னுள் வளரும் வாது, சூது, பிறர் செல்வத்தின் மீதான மோகம் உன்னையே அழித்து விடும்.ஆசையே அனைத்து துன்பங்களுக்கும் காரணம் ஆகும்!
(29) வம்புவசை பேசாதே வாளுக்கிரை யாகாதே
வம்புரைக்கக் கூடாது வம்புரைத்தால் வன்னரகம்!
என்னிடம் வம்பு செய்து, வசைபாடி, மடிந்து போகாதே வீண் சொல் பேசினால் நரகமே செல்வாய்!
(30) கொடுத்தவரம் பறிப்பேனடா குடல்தோண்டி நான்சுவாமி
கொடுத்த வரத்தை திரும்ப பறிக்கவும் உரிமை உள்ளவர் நான்,தீயவரின் குடலை பிடுங்கி எடுத்து உயிரையும் பறிப்பேன்!
(31) பொக்கணமும் புலித்தோலும் பூமாலை கேட்கவில்லை
மற்புடைய தேங்காய்பழம் மகிழ்வுடனே கேட்கவில்லை!
புலித்தோலும், வெகுமதியும், பூமாலையும் எனக்கு வேண்டாம்தேங்காய் பழம் கூட வேண்டாம். அன்பு மட்டுமே போதும்!
(32) ஆடுகிடாய் கோழிபன்றி ஆயனுக்கு வேண்டாங்காண்
ஒரு அன்பு மலரெடுத்து அனுதினமும் பூசைசெய்வாய்!
ஆடு, கிடா, கோழி போன்ற உயிர் பலி எனக்கு வேண்டாம். அன்புடன் என்னை வணங்கினால், அதுவே போதும்!
(33) ஏடு தந்தேன் உன் கையில் எழுத்தாணியும் கூட தந்தேன்,
பட்டயமும் தந்தேனடா பதறாதே என் மகனே!
புத்தியினால் கெட்டவரே பிழைக்கமதி தேடுங்கப்பா
ஆதிபரன் சோதிநாதன் அதிகாரம் செய்யவாறேன்!
புத்தகமும், எழுத்தாணியும் தந்தேன் உன் கையில்.பட்டமும் தந்தேன் உனக்கு, பதறாதே என் மகனே, மதிகெட்டு போனவரே, திருந்தி வாழ முயற்சி செய். ஜோதி ஸ்வரூப ஆதிநாதன் நான், இப்புவி ஆள வருகிறேன்!
(34) சத்தியமாய் இருக்க வேணும் தர்மபதி கிடைக்குமடா!
மகனே, சத்திய வழி நடந்து செல், சொர்கத்தை அடைவாய்!
(35) விடியும் பொழுது வேசம் பலதணிவேன்,
பிடியு மனுவுடனே பெரியயுக ஆள வைப்பேன்!
நாள்தோறும் புதுப் பொலிவுடன் காட்சி பல தருவேன் நான். நல் மக்களுடன் வாழ்ந்திருந்து, தர்ம யுகம் ஆள வைப்பேன்!
(36) அவரெவர் நினைக்கின்ற நினைப்புக்குத்
தக்கதாக இருந்து விளையாடினேன்!
எந்த உருவில் என்னை பார்க்க நினைக்கிறார்களோ, அந்த உருவில் நானிருந்து, திருவிளையாடல்களையும் புரிகின்றேன்!
(37) என்பேரைச் சொல்லி எவரெவர் வந்தாலும்,
அன்பாக அன்னமிட்டு ஆதரித்த பக்தருக்கு
என்னென்ன அபாயம் இடுக்கமது வந்தாலும்
அந்நேரம் நாராயணன்நான் ஆயனங்கே வருவேன்!
என் பெயரை சொல்லி, எவர் வந்தாலும், அன்னாரின் பசி தீர்க்க, அன்புடன் உணவு தரும் பக்தருக்கு, வாழ்வில் எத்தனை இடர்பாடு வந்தாலும், நாராயணன் நான் அங்கு சென்று அவர்களை காத்தருள்வேன்!
(38) ஐந்துதலை நாகத்தின்மேல் பள்ளிகொள்வ தறியவில்லையா
பத்தவதாரம் பிறந்த பாதைகளைச் சொல்மகனே!
மகனே, ஐந்து தலை நாகத்தின் மீது துயில் கொண்ட என் தசாவதார லீலைகளை, அனைவருக்கும் கூறிடுவாய்!
(39) ஆணானேன், பெண்ணானேன் அடங்காத சொருவமானேன்
அவரவர்க்குத் தனித்தனியே ஆண்டிப்புத்தி சொல்லிவந்தேன்!
அடங்கா ஸ்வரூபன் நான், ஆணாவும், பெண்ணாவும் இருக்கின்றேன்.பண்டார உருவிலான நான், அனைருக்கும் தனி அருளுரை வழங்கினேன்!
(40) நந்திசொன்ன உபதேசம் நாள்தோறும் கேட்டிருந்தும்
நீலன் முப்புராதி செய்த நிட்டூரம் போலாச்சே!
நான் சொன்ன நல் உபதேசங்களை நாள்தோறும் கேட்டிருந்தும்,நீலனும், முப்புராதியும் செய்த தவற்றையே செய்து, மோசம் போனீர்களே!
(41) முன்னும் பின்னும் சொல்லிவிட்டும் முழுமோசம் ஆகிப்போச்சு
புத்திக்கெட்ட பிள்ளைகளே சக்திகெட்டுப் போனீர்களே
ஒருகாதில் தாங்கேட்டு ஒருகாதில் வீட்டீர்களே!
என் அவதார நல்லுபதேசங்களை கேட்காமல், சக்தியையும், புத்தியும் நீங்கள் இழந்து நிற்பதின் காரணம்ஒரு காதில் வாங்கி இன்னொன்று மூலம் வெளி விட்டதினால் தானே!
(42) கோத்திரத்தில் உள்ளவர்களுக்கு கூடுமட்டும் புத்திசொன்னேன்
கேளாத பேர்களுக்கு நானென்ன செய்வேனப்பா?
என் சான்றோருக்கு முடிந்த அளவு புத்திமதி சொன்னேன்.அதைக் கேட்க மறுத்து ஒதுங்கிப் போனால் நான் என்ன செய்வேன்?
(43) தாணுமா லயனும் நானே, ஓரடியால் உலகளந்தஉண்மைதனைச் சொல்மகனே!
ஓரடியால் உலகளந்ததாணுமாலயன் நானே எனும்இந்த உண்மையை உலகறியச் சொல் மகனே!
(44) ஊந்து திரியும் உயிர் பிராணி யாதோன்றையும்
வதைக்க வேண்டாம் கன்னுமக்கா!
நான் படைத்த, ஊர்ந்து திரியும் ஜீவராசிகள் எதையுமே வதைத்திடாதீர்கள் என் அருமை மக்களே!
(45) உன்னோடு என்னாளும் உயிர்க்குயிராயி ருப்பேனப்பா!
முன்னாலே ஒடுக்க வந்த ஒருவரையும் விட்டதில்லை.
எதிர்த்தவனை வைத்தேனோ உங்கள்யிருகாதுங் கேட்கலையோ?
மகனே, எப்போதும் உன்னுடன் உயிர்க்கு உயிராய் இருப்பேன் என்னை அடக்கி, ஒடுக்கநினைத்தவனை, தண்டிக்காமல் விட்டதில்லை என்பதை உன் இரு காதும் கேட்டது இல்லையா?
(46) கள்ளனிடம் நானிருப்பேன், காட்டிக் கொடுத்திடுவேன்
பிடித்தவனோடே யிருப்பேன், அவரைபிள்ளை போலாக்கிடுவேன்!
தீயவன் அருகில் நானிருந்து, அவனை காட்டியும் கொடுத்திடுவேன்.
எனக்கு பிடித்தவர்களோடு நான் இருந்து, அவர்களை பிள்ளை போல் காத்திடுவேன்!
(47) உங்களுக்கு வேலை செய்ய உலகில் வந்தேன் கண்ணுமக்காள்,
இருமனதா லெண்ணாதே, பின் எனக்கு உத்தரம் சொல் வாயோ!
உங்களுக்கு அருள் புரிய அவதரித்தேன் நான்.சஞ்சலம் அற்ற நிலையான மனதுடன் என்னிடம் தஞ்சம் அடைவீர்!
(48) நீபெரிது நான்பெரிது நிச்சயங்கள் பார்ப்போமென்று
வான்பெரி தறியாமல் மாள்வார்வீண் வேதமுள்ளோர்!
அனைவருக்கும் மேலானவர் பரம்பொருளே என்பதை உணராமல் நானே பெரியவன், நீ பெரியவனென விதண்டாவாதம் செய்யும் பெய்வேதமுள்ளோர் மாள்வார்கள்!
(49) என்மகனே, விசுவாசமதிலே விரோதம் நினையாதே, எளியோரைக்கண்டு யீந்துயிரங்கிடு நீ.
உனக்கு விசுவாசமாக உள்ளவரை பகைத்துக் கொள்ளாதே.ஏழை எளியோற்கு கருணையுடன் தானம் கொடு!
(50) இரப்போர் முகம்பார்த்து ஈவதுவே நன்றாகும்!
எளியோரின் நிலைக்கேற்ப, தர்மம் செய்வது சிறப்பாகும்!
(51) எவர்க்கு மிகஈந்து இருப்போரே நன்றாகும்!
யார் எவர் என பேதம் பார்க்காமல், தேவை அறிந்து தர்மம் செய்வதே மிக சிறப்பாகும்!
(52) ஏழ்மையாய் வருவோம் இரப்பன் பரப்பனென
இரப்பனைக் கைகொண்டோர் எனையேற்றார்!
ஏழை பண்டார உருவில் இவ்வுலகில் நான்வருவேன்.பண்டாரம் என்னை புரிந்து கொண்டவர், என்னை ஏற்றவர்கள்!
(53) நாம் வந்தோமென்ற நாமமது கேட்டவுடன்
தாம்வந்து வேடமிட்டோர் சாதியது நன்றாகும்!
நாராயணர் நான் பூமியில் அவதரித்துள்ளதை அறிந்து,என்னிடம் வந்து சரணடைபவர் குலம், மேலோங்கி நிற்கும்!
(54) தர்மம் பெரிது தாங்கியிரு என்மகனே,
தாழக்கிடப்பாரைத் தர்க்காப்பதே தர்மம்!
மேலான தர்ம காரியம் செய்வதை என்றுமே நிறுத்தாதே.தர்மத்தில் சிறந்தது, வீழ்ந்து கிடப்போரை காப்பதேயாகும்!
(55) பொல்லாதாராகிடினும் மோதிப்பகையாதே,
சத்துரு வோடும் சாந்தமுட னேயிருநீ!
தீயவனேயாயினும் மோதிப் பகையாதே, எதிரியோடும் சாந்தமுடனே நீ இரு!
(56) பொய்யரோடு அன்பு பொருந்தியிருக்காதே,
மெய்யரோடு அன்பு மேவியிரு என்மகனே!
தீயவரிடம் அன்பு காட்டி பழகிடாதே நல்லவரிடம் உளமார்ந்த அன்புடன் பழகு!
(57) எளியோரைக் கண்டு இரங்கியிரு என்மகனே,
வலியாரைக் கண்டு மகிழாதே என்மகனே!
வலியோர்களை போற்றிப் புகழாமல், ஏழை எளியவரிடம் கருணையோடு இருந்திடு!
(58) நன்றி மறவாதே, நான் பெரிதென்று எண்ணாதே!
அண்டின பேரை அகற்ற நினையாதே!
நன்றி மறவாதே, நானே வலியவன் என நினைக்காதே. அண்டியோர்களை தள்ளி வைக்கவும் நினைக்காதே!
(59) ஆபத்தைக் காத்து அகலநீ தள்ளாதே!
சாபத்தைக் கூறாதே தன்னளவு வந்தாலும்!
ஆபத்தைக் காத்து அகலநீ தள்ளாதே! சாபத்தைக் கூறாதே தன்னளவு வந்தாலும்!
(60) அடிப்பார் அடிக்கவந்தால் அடியைச் சகித்திடுங்கோ
வம்பு வசைகள்சொல்லி வைதாலும் கேட்டிடுங்கோ
அவரவர்கள் தன்கணக்கு உங்கள் அரசனிடத்திருக்கிறது.
உன்னை எவரும் தாக்க வந்தால் திருப்பித் தாக்காதே.எவர் தூற்றினாலும் அதனையும் கேட்டிடு. அவரவர் செய்யும் பாபக் கணக்கு உங்களை ஆளும் என்னிடம் உள்ளது.
(61) அவரவர்கள் செய்யுங்குற்றம் ஆண்டிநானும் அறிவேனடா!
அவரவர் செய்யும் பாபங்களை ஆண்டி நான் நன்கே அறிந்திடுவேன்!
(62) அவரவர்க்கு உள்ளதுண்டு அநியாயம் செய்யாதே!
அவரவர்பாப,புண்ணியத்திற்கேற்ப தீர்வு கிடைக்கும்.அநியாயம் செய்யாதே!
(63)ஓர் அடியால் உலகளந்த மாயன் நான், உலகை ஆட்சி செய்ய நிச்சயம் வருவேன்!
பாதியடி கேட்டதற்கு பங்கு இல்லை என்றுசொன்னான் சீறியவ னைப்பார்த்து சினத்துவிட்டேன் மாவலியை!
(64) பாதியடி கேட்டதற்கு பங்கு இல்லை என்றுசொன்னான்
சீறியவ னைப்பார்த்து சினத்துவிட்டேன் மாவலியை!
விண்ணையும் மண்ணையும் அளந்த என்னிடம், மீதி அளக்க, இடமில்லை என்று சொன்னமாவலி மீது சினம் கொண்டேன் நான்!
(65) பொறுமை பெரிது பெரிய திருமகனே,
தர்மம் பெரிது தாங்கியிரு என்மகனே!
பொறுமை காப்பதே சாலச் சிறந்தது, தர்மமே என்றென்றும் வெல்லும் என்பதை மறவாதே!
(66) நல்லார்க்கும் ஓர்நினைவே நலமாகும் என்றுசொல்லி
எல்லார்க்கும் விளம்பி இருநீ என்மகனே
இறைவன் ஒருவரே என நிலையான நினைப்புடனிருப்பதே சிறந்ததென அனைவருக்கும் நீ எடுத்துரைக்க வேண்டும்!
(67) நல்ல நினைவோர்க்கு நாளெத்தனை ஆனாலும்
பொல்லாது வாராமல் புவிமீதில் வாழ்ந்திருப்பார்!
நல்ல மனம் கொண்டோர்க்கு, காலம் எத்தனை கடந்தாலும் தீமை இல்லா நல் வாழ்வு நிச்சயமாய் அமையும்!
(68) முள்முருக்கம் பூவு மினுக்கு மூன்றுநாளை
கள்ளருக்கு வாழ்வு காணுமது போல்மினுக்கு
நல்லோர்க்கு வாழ்வு நாளுங் குறையாமல்
வல்லோர்க்கும் நல்லோராய் வாழ்ந்திருப்பார்!
முள் மரத்தில் பூக்கும் பூவின் உயிர் மூன்று நாட்களே. அதர்ம வழி வாழ்வும் விரைவில் அழிந்திடும், நன்மை செய்பவர் தம் வாழ்வில் குறை இன்றி,
வல்லோருக்கும் நல்லவர்களாக இருப்பார்கள்!
(69) அடக்கம் பெரிது அறிவுள்ள என்மகனே.
கடக்கக் கருதாதே கற்றோரைக் கைவிடாதே!
அடக்கமே வாழ்க்கைக்கு சாலச் சிறந்தது. அறிவாளிகளை விட்டு விலகி நில்லாதே!
(70) உன்னருள் தானென்றுசொல்லி உகந்திடாதே மகனே
என்னருள் ளல்லாதே ஏதும்நடவாது மகனே!
என்னால்தான் அனைத்தும் நடந்தது என இறுமாப்பு கொள்ளாதே.வைகுண்டர் அருள் இன்றி எதுவுமே நடக்காது என்பதை மறவாதே!