அகிலத்திரட்டு வேதநூலின்படி, ‘ஈசன் முன்னால் கூறி இருந்தபடியே இக் கலியுகம் முடியும் தருவாயில் நம்மை வாழ வைக்க ஸ்ரீ சிவனும் உமா தேவியும், ஸ்ரீ மஹாவிஷ்ணுவும், லட்சுமி தேவியும், ஸ்ரீ பிரம்மாவும், சரஸ்வதி தேவியும், வேத நல்மறையோரும் மீண்டும் தோன்றப் போகின்றார்கள். ஸ்ரீ மஹாவிஷ்ணு அகண்டத்தில் தோன்றியதை எல்லாம் தீர ஆராய்ந்து, தர்மத்தை நிலை நாட்டி, அவற்றில் உள்ள தீமைகளை முற்றிலும் அழித்து, ஆகாயம் முதல் பாதாளம்வரை மேன்மைப்படுத்தப்பட்ட, அருள்நிலை கொண்ட யுகத்தை ஸ்ரீ மஹாவிஷ்ணு நிர்மாணிக்கப் போகின்றார். மேன்மைப்படுத்தப்பட்ட பொன்னான பூமி, வானம், வாயு (காற்று), நிலவு, மேன்மையான மனிதர்கள், மேன்மைப்படுத்தப்பட்ட ஊர்வன, பிற உயிர் வகைகள் என அனைத்துமே நல்லவற்றை உள்ளடக்கியவைகளாக இருக்கும். தான் முடிவு செய்துள்ளபடியே ஸ்ரீ மஹாவிஷ்ணு கடலை அழைத்து பூமியை புனிதப்படுத்துமாறு கூறுவார். அந்த கடலும் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் ஆணையை ஏற்று உலகை சுத்தப்படுத்திய பின் அவரிடமே சென்று சரண் அடைந்து விடும். பூமி சுத்தப்படுத்தப் பட்ட பின்னர் ஸ்ரீ மஹாவிஷ்ணு எண்ணி உள்ளபடியே பொல்லாதவர்கள் அழிந்து, நல்லவர்கள் தோன்றுவார்கள். அப்போது துவாரகா பொன்பதியும் துலங்கும்.