அகிலத்திரட்டு வேதநூல் கூற்றின்படி பிரபஞ்சம் முழுவதிலும் நிறைந்திருக்கும் இறைவன் தாமே சிவமாக, சக்தியாக, நாதமாக, விஷ்ணுவாக, ருத்திரராக, மகேஷ்வரனாக தோன்றி, சூரிய பகவான், வாயு பகவான் போன்றவர்களை படைத்த பின் பல்வேறு ஜீவராசிகளையும் படைத்து, அதிலே 84 லட்சம் வகையான உயிரினங்களையும் படைத்து, இந்த உலகை இயக்கி வருகின்றார். ஆதியில் பல்வேறு ஜீவன்களையும் பல்வேறு யுகங்களையும் உள்ளடக்கிய பிரபஞ்சம் தோன்றியவுடன், முதல் யுகத்திற்கு ‘நீடிய யுகமென’ ஆதி பிரம்மா பெயரிட்டப் பின் பிரபஞ்சம் எந்த அம்சங்களை உள்ளடக்கி இருக்க வேண்டும் என்று முடிவெடுக்க பரமேஸ்வரன் நெருப்பு மூட்டி ஒரு யாகம் செய்யத் துவங்கினார். அந்த யாகத் தீயின் நடுவில் இருந்து குரோணி என்கிற கொடிய அசுரன் வெளி வந்தான். குரோணி வெளி வந்த நாட்களிலேயே அவன் தேவ கணங்களை துன்புறுத்தத் துவங்கியதும் இல்லாமல் தேவலோகங்களையும், கயிலையையும் அழிக்க முற்பட்டபோது, அவனை அழித்து தேவர்களையும் தேவலோகத்தையும் காப்பாற்ற’ தேவையான சக்தியை ஈசரிடம் இருந்து பெற ஸ்ரீ மஹாவிஷ்ணு தவத்தில் இருந்தார். அந்த தவத்தினால் மகிழ்ச்சி அடைந்த ஈசரும் “குரோணியை ஆறு துண்டுகளாக வெட்டி அழிக்க வேண்டும், அவ்வாறு அழித்தவுடன், அவனின் ஒவ்வொரு சதை பிண்டமும் மீண்டும் ஒரு அசுரனாக பூமியில் பிறக்கும், அப்படி பிறக்கும் அசுரர்களை நீரே உத்தமராக அவதரித்து அழிக்க வேண்டும்” எனக் கூறி ஸ்ரீ மஹாவிஷ்ணு கேட்ட வரங்களை தந்து அருளினார்.