ஆதி ஆகமமான வேதத்தில் எழுதி இருந்தபடியே, கலியின் வரங்களைப் பறித்து கலியை அழிக்க திருச்செந்தூர் வந்து கடலுக்குள் சென்ற ஸ்ரீ மஹாவிஷ்ணு, அங்கு தங்க ஒளி வீசுவதை போன்ற நிலையில் தனக்காக காத்துக் கொண்டு தனது வருகையை எதிர்பார்த்து மகரமாக வளர்ந்து நின்ற இருந்த மஹாலட்சுமியை மோகனத்தில் வீழ்த்தி, அவள் மனதில் நெருப்பு போல காம இச்சையை எரிய விட்டு அவளோடு இரண்டறக் கலந்த பின், கொல்லம் ஆண்டு 1008 மாசி மாதம் 20-ஆம் தேதி (1st March C.1833) வெள்ளிக்கிழமை அன்று மகரமாக நின்ற அவளது உடலில் இருந்து அரூபமாக வெளியில் வந்தார். அரூப உருவில் வெளிவந்த ஸ்ரீ மஹாவிஷ்ணு கடற்கரையை அடைந்தபோது தனது உருவை சந்நியாசி வடிவிலான “ஸ்ரீ பண்டாரம்” எனும் ஸ்ரீ வைகுண்டராக மாற்றிக் கொண்டு தோற்றம் அளித்தார். இப்படியாக ஸ்ரீ மஹாவிஷ்ணு பூமியில் எடுத்த பத்தாவது அவதாரமே ஸ்ரீ வைகுண்டர் அவதாரம் ஆகும்.